இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை விஜய்யால் நிரப்ப முடியும்_Vijay can fill the void in Tamil Nadu politics


        

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!என்ற முழக்கத்தோடு உள்ள கடிதத்தில் அறிக்கை வெளியிட்டிருப்பதும், தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன என்று விஜய் கூறியுள்ளதும் பல பேருக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கலாம். ஆனால், அதை வெளிகாட்டி கொள்ளாத அரசியல்வாதிகள், அவருக்கு கட்சி தொடங்க உரிமை உண்டு என்றும், சிலர் வரவேற்பதாகவும் கூறுகிறார்கள். இது மத்திய மற்றும் மாநில ஆளும், ஆண்ட கட்சிகளை குறிப்பிட்டு தான் அவ்வாறு கூறியுள்ளார்.

    மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களால் எதிர் கட்சியிலிருந்த போது ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் ஆளும் கட்சிக்கு மாறியவுடன் அவர்கள் புனிதர்களாக கருதப்பட்டு பதவி அளிப்பதும், மாநிலத்தில் உள்ள திராவிட மற்றும் சமூக நீதி பேசும் கட்சி ஊழலுக்கு ஒன்றும் சளைத்தவை இல்லை என்பதை அவர்கள் நீதி மன்றங்களால் தண்டிக்கப் படுவதும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கே பதவி அளித்து மகிழ்வதும் தொடர் கதையாக உள்ளது. மத்தியில் உள்ள ஆட்சியோ, மாநிலங்களை வஞ்சித்து நிதிப்பகிர்வை பாரபட்சமாக செய்வதும், ஒரு மதத்தை மட்டும் தூக்கி பிடிப்பதும், எதிர் காட்சிகள் மேல் அதிகப்படியான ஊழல்  விசாரணை செய்வதும் மற்றும் வழக்கு தொடுப்பதும், தேர்ந்தெடுத்த அரசுகளை கவிழ்த்து ஆட்சியைப் பிடிப்பதும் அல்லது ஆளுநர்கள் மூலம் அடாவடி செய்வதும் தொடரும் இந்த தருனத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கான சரியான மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் யாரும் இல்லாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருந்தது. அத்தகைய வெற்றிடத்தை திரு விஜய் அவர்களால் நிரப்பக்கூடும்,

 ஆனால், கட்சி தொடக்க அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி கொள்கையை வகுப்பதும் அதை செயல்படுத்துவதும் முக்கியம். அதற்கு உறு துணையானவர்களை மட்டும் தன்னோடு வைத்துக் கொள்வதும் நல்லது. நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதும், அவரது ரசிகர்களை தனது கட்சி தொண்டர்களாக மாற்றி ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதும் அவரால் வெற்றி கனியை பறிக்க முடியும் என்பது எனது கருத்து.