இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை விஜய்யால் நிரப்ப முடியும்_Vijay can fill the void in Tamil Nadu politics


        

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!என்ற முழக்கத்தோடு உள்ள கடிதத்தில் அறிக்கை வெளியிட்டிருப்பதும், தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இருபுறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன என்று விஜய் கூறியுள்ளதும் பல பேருக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கலாம். ஆனால், அதை வெளிகாட்டி கொள்ளாத அரசியல்வாதிகள், அவருக்கு கட்சி தொடங்க உரிமை உண்டு என்றும், சிலர் வரவேற்பதாகவும் கூறுகிறார்கள். இது மத்திய மற்றும் மாநில ஆளும், ஆண்ட கட்சிகளை குறிப்பிட்டு தான் அவ்வாறு கூறியுள்ளார்.

    மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களால் எதிர் கட்சியிலிருந்த போது ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் ஆளும் கட்சிக்கு மாறியவுடன் அவர்கள் புனிதர்களாக கருதப்பட்டு பதவி அளிப்பதும், மாநிலத்தில் உள்ள திராவிட மற்றும் சமூக நீதி பேசும் கட்சி ஊழலுக்கு ஒன்றும் சளைத்தவை இல்லை என்பதை அவர்கள் நீதி மன்றங்களால் தண்டிக்கப் படுவதும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கே பதவி அளித்து மகிழ்வதும் தொடர் கதையாக உள்ளது. மத்தியில் உள்ள ஆட்சியோ, மாநிலங்களை வஞ்சித்து நிதிப்பகிர்வை பாரபட்சமாக செய்வதும், ஒரு மதத்தை மட்டும் தூக்கி பிடிப்பதும், எதிர் காட்சிகள் மேல் அதிகப்படியான ஊழல்  விசாரணை செய்வதும் மற்றும் வழக்கு தொடுப்பதும், தேர்ந்தெடுத்த அரசுகளை கவிழ்த்து ஆட்சியைப் பிடிப்பதும் அல்லது ஆளுநர்கள் மூலம் அடாவடி செய்வதும் தொடரும் இந்த தருனத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கான சரியான மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் யாரும் இல்லாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருந்தது. அத்தகைய வெற்றிடத்தை திரு விஜய் அவர்களால் நிரப்பக்கூடும்,

 ஆனால், கட்சி தொடக்க அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி கொள்கையை வகுப்பதும் அதை செயல்படுத்துவதும் முக்கியம். அதற்கு உறு துணையானவர்களை மட்டும் தன்னோடு வைத்துக் கொள்வதும் நல்லது. நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதும், அவரது ரசிகர்களை தனது கட்சி தொண்டர்களாக மாற்றி ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதும் அவரால் வெற்றி கனியை பறிக்க முடியும் என்பது எனது கருத்து.

 


 

வியாழன், 11 ஜனவரி, 2024

2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்குமுன் அங்கீகரிக்கப்படாத மனைகளை வாங்கியவர்களின் கவனத்திற்கு...For the attention of those who purchased unapproved plots before 20th October 2016...

சொந்தமாக வீட்டுமனை வாங்கி, வீடு கட்ட நினைப்பவர்களில் பலர் இன்றைக்கு நகர்ப் புறங்களில் அதைச் செய்ய முடியாது. காரணம், வீட்டு மனைகளின் விலை ஏகத்துக்கும் அதிகரித்து, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நகர்ப்புறங்களுக்கு வெளியில்தான் மனை வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அப்படிச் செய்ய நினைக்கும்போது, அவர்களிடம் இருக்கும் மிகக் குறைந்த பணத்தில் அவர்களால் வாங்க முடிவது அரசு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை களாகவே உள்ளன. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வாங்கும்போது, வீட்டுக் கடன், சாலை வசதி, கழிவுநீர் வெளியேற்றம் எனப் பல வசதிகள் கிடைக்காமலே போகிறது.

        இந்தச் சூழலில், அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிப் பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்யவும் 9.9.2016 முதல் தடை விதித்தது.

இதை அடுத்து, சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்புகளின் ஒப்புதல் பெறாத வீட்டு மனைகள் அனைத்தையும் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை சி.எம்.டி.ஏ / டி.டி.சி.பி ஒப்புதல் பெற்று அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை களாக மாற்ற 2017-ல் அரசாணை வெளியிட்டது. அதாவது, 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்குமுன் பதிவு செய்த பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளைக் கட்டணம் செலுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி, அங்கீகாரம் பெற்ற மனைகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆணை பலமுறை நீட்டிக்கப்பட்டது. இப்போது 2024 பிப்ரவரி 29-ம் தேதி வரை மனைகளை வரையறை செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த காலத்தில் ஒருவர் வாங்கிய அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவைத் தமிழ்நாடு அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் ஒழுங்குமுறை விதி, 2017-ன்கீழ் முறைப்படுத்த விண்ணப் பிக்கவில்லை எனில், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வடிகால் அமைப்பு வழங்கப்படாது. மேலும், அந்த மனையில் எந்தவொரு கட்டடமும் கட்ட அனுமதி வழங்கப்படாது.

 விண்ணப்பிக்கும் முறை

தமிழக அரசின் www.tnlayoutreg.in என்கிற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாகப் படிவம் 1-ஐ பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது சீராய்வுக் கட்டணமாக (Scrutiny Fee) ரூ.500 இணையம் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்ததற் கான சான்றாக பதிவுச் சீட்டு இணையத்தில் வழங்கப்படும். அந்த பதிவுச் சீட்டு பெற்று, அதில் இருந்து 30 நாள் களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி) குறிப்பிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்..

 விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள கிரயப் பத்திரம், முந்தைய உரிமை யாளரின் பெயரில் உள்ள பத்திரம், விண்ணப்பதாரரின் பெயரில் பெறப்பட்ட பட்டா, விண்ணப்பம் செய்யப்படும் நாளுக்கு ஒரு வார காலத்துக்கு முன் வரை சார்பதிவாளரிடம் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழ், மேலும், மனைப் பிரிவைச் சுற்றி பொது உபயோகச் சாலையை இணைக்கும் மற்றும் சுற்றியுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு சுற்றுச் சார்பு வரைபடம் (Topo Sketch) இணைக்கப்பட வேண்டும். மனைப் பிரிவின் முழுமையான லே அவுட் வரைபடம், எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்டு, மனையின் உட்பிரிவு காட்டப்பட்டு, மனையைச் சுற்றி யுள்ள சாலையின் அளவுகள் இட அமைப்பு வரைபடம் (Field Measurement Book - FMB) ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உள்ளாட்சி அமைப்பில் உள்ள சம்பந்தப்பட்ட முறைப்படுத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். மனைப்பிரிவு விதிகளுக்கு உட்பட்டுச் சரியாக இருந்தால், முறைப்படுத்தும் அதிகாரி அதற்கான ஒப்புதலை வழங்கி, பிற கட்டணங்களைச் செலுத்தச் சொல்வார். அதில் இருந்து 30 நாள்களுக்குள் அனைத்துக் கட்டணங்களையும் செலுத்தியபின், முறைப் படுத்தி ஆணை வழங்கப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், சி.எம்.டி.ஏ / டி.டி.சி.பிக்கு 30 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.

 முறைப்படுத்துவதற்கான கட்டணங்கள்...

அனுமதியற்ற வீட்டு மனைகளை முறைப் படுத்த தமிழக அரசு மூன்று வகையான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. முதல் கட்டணம், சீராய்வுக் கட்டணம் (மனைக்கு ரூ.500). இரண்டாவது, அபிவிருத்திக் கட்டணம் (Development Charge). மூன்றாவது, ஒழுங்கு முறைப்படுத்தும் கட்டணம் (Regularisation Charge). இந்த அபிவிருத்தி மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தும் கட்டணம் என்பது, கிராமப் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்ற மனையின் உள்ளாட்சி அமைப்புகளுக்கேற்ப மாறுபடுகிறது.

அபிவிருத்திக் கட்டணம்...

மனை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் அபிவிருத்திக் கட்டணம் மனையின் சதுர மீட்டர் அளவில் கணக்கிடப் படும். மனை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டணம் என்பது மாநகராட்சிப் பகுதியில் சதுர மீட்டருக்கு ரூ.100, நகராட்சிப் பகுதி ரூ.60, பேரூராட்சி (
Town Panchayat) மற்றும் ஊராட்சி (Panchayat) பகுதி ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்திக் கட்டணம், மாநகராட்சி ரூ.500, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி ரூ.250, முதல் நிலை, இரண்டாம் நிலை நகராட்சி ரூ.150, பேரூராட்சி ரூ.75, ஊராட்சி ரூ.25 என சதுர மீட்டருக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படி வசூலிக்கப்படும் அபிவிருத்திக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

     Courtesy: 'Vikatan' Dt. 05.01.2024

இது தொடர்பான  அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.






.