இன்றைய பொன் மொழி


"வியாபார ரீதியாக அரசாங்கத்தை நடத்த முடியாது. அது மனிதாபிமானியாக
இருக்க வேண்டும். அது ஒரு இதயம் கொண்டிருக்க வேண்டும்." -ஹென்றி லெனன்

புதன், 9 நவம்பர், 2011

மது அருந்துவதால் வருடத்திற்கு 25 லட்சம் பேர் இறக்கிறார்கள்


மருத்துவர் ஒருவர் குடிகாரர்கள் மத்தியில் பேசும் போது, குடிப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்குவதற்காக செய்முறை ஒன்றைச் செய்து காட்ட விரும்பினார்.  இரு கண்ணாடி பாத்திரங்களை எடுத்து ஒன்றில் நீரையும் மற்றொன்றில் மதுவையும் நிரப்பி இருந்தார்.  அவ்விரு கண்ணாடி பாத்திரத்தின் ஒவ்வொன்றிலும் ஒரு புழுவை விட்டார்.  தண்ணீரில் விட்ட புழு நன்றாக நீந்திக் கொண்டிருந்தது ஆனால், மதுவில் விட்ட புழுவோ
துடி துடித்து இறந்து போனது.  நம் உடல் உறுப்புகளும் இது போலத்தான் செயல் இழந்து போகும் என்பதை நிரூபிக்கவே அவ்வாறு செய்தார்.  அதை குடிகாரர்கள் உணர்ந்து கொண்டார்களா என்றறிய, “இதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள் “மது குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் செத்து விடும் என்பதை அறிந்து கொண்டோம்” என்றனர்.


இப்படி தவறாக புரிந்து கொண்டோர் உலகில் பல பேர் இருக்கிறார்கள் போலும் அதனால் தான், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் அதாவது 2.5 மில்லியன் மக்கள் மது அருந்துவதால் இறக்கிறார்கள்.  மேலும் உடல் நலம் கெடுவதற்கும் இள வயது இறப்பு ஏற்படுவதற்கும் காரணமாக, உலகை அச்சுறுத்தும் மூன்றாவது  பெரும் பிர்ச்சினையாக மதுப் பழக்கம் உள்ளது.  இவற்றோடு மதுப் பழக்கம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆவதற்கும் தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்லவும், பெரியவர்கள் வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுப்பதற்கும் காரணமாகவும் இருக்கிறது. மதுவினால் அடிமையானோர் தங்கள் உடல் நலம் மற்றும் மண நலத்தைக் கெடுத்துக் கொள்வதோடு தங்களைச் சுற்றியிருப்பவர்களையும் இன்னலுக்கு உள்ளாக்குகின்றனர்.  மதுப் பழக்கம் நரம்பு மற்றும் கல்லீரல் சம்பந்ந்தமான நோய்கள் வருவதற்கும் காரணமாக உள்ளது.
மேலே 2ஆம் பத்தியில் சொல்லப் பட்டுள்ளவை அனைத்தும் உலகச் சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANIZATION) வெளியிட்ட ஆய்வறிக்கையில் சொல்லப் பட்டுள்ளதாகும்.
Source:http://www.who.int/substance_abuse/facts/alcohol/en/index.html

என்ன ஆய்வறிக்கைகள் வந்தாலும் நம் ‘குடி’ மகன்களின் அலட்டல் இருக்கிறதே அதைச் சொன்னால் உங்களுக்கும் சிரிப்பை வர வழைக்கலாம் என்பதால் நான் படித்த நகைச் சுவை துணுக்குகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

போதை கலந்த குரலில் போலீசுக்கு ஒரு போன் வந்தது, “அய்யோ! எனது காரின் ஸ்டீயரிங் திருடு போய் விட்டது. டேஷ் போர்டு, பிரேக், ஆக்சிலேட்டரையும் திருடி விட்டனர்” என்று போனில் பேசியவர் கூறினார். 
சற்று நேரம் கழித்து அதே ஆள் மீண்டும் போலீசுக்கு போன் செய்தார், “சாரி! நான் காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்ததால் எல்லாம் திருடு போய் விட்டதாக் தவறாக நினைத்து விட்டேன்”
                        *******
உடல் மெலிந்த கிழவர் சாய்வு நாற்காலியில் ஹாயாக ஆடிக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த ஒரு பெண்,”இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே! அதன் ரகசியம் என்ன?” என்று ஆவலாகக் கேட்டாள்.
“நான் தினமும் 10 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன். மூன்று முறை மது குடிக்கிறேன். ஏராளமாக தின்பேன் ஆனால், உடற் பயிற்சி செய்ய மாட்டேன்” என்றார் அந்த கிழவர்.
“ஆச்சரியமாக இருக்கிறதே, அது சரி உங்கள் வயது என்ன?” என்று அந்த பெண் கேட்டாள்.
“எனக்கு வயது 26” என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

குறிப்பு: இப் பதிவின் முந்தைய தலைப்பான "மது அருந்தினால் வயிற்றில் உள்ள புழு செத்து விடும்" என்பது தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்பதால், அதை மாற்றியுள்ளேன்.

There is this to be said in favor of drinking, that it takes the drunkard first out of society, then out of the world. - Ralph Waldo Emerson


நன்றி மீண்டும் சந்திப்போம்

கருத்துகள் இல்லை: